Saturday, March 24, 2018

மன அழுத்தம் போக்கும் கறிவேப்பிலை



மன அழுத்தம் போக்கும் கறிவேப்பிலை


கறிவேப்பிலையை ஒதுக்குபவர்கள் வெகு விரைவில் ஆரோக்கியத்தை இழப்பார்கள். நாளடைவில் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைவார்கள்.
அறிவிலும் ஆக்கத்திலும் சிறந்த நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் பயனை அறிந்தே அதை சமையலுக்கு பயன்படுத்தியுள்ளனர். எனவே குழந்தைகளுக்கு கறிவேப்பிலை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டு வரவேண்டும்.
கறிவேப்பிலையில் வைட்டமின் , பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கைகால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.

மன அழுத்தம் நீங்க
அதிக மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போது பார்த்தாலும் குழப்பமாகவே இருப்பார்கள். எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு அருமருந்தாக கறிவேப்பிலை திகழ்கிறது.

கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும்.

இளநரை மாற
இன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க முடியவில்லை. இதனால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது. இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.
கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.

கொழுப்புச் சத்து குறைய
இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது. ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும்.

சுவையின்மை நீங்க
சிலருக்கு உணவு உண்ணும்போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இந்த சுவை அறியாதவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் மண்ணைத் தின்பது போலத்தான் இருக்கும். நிறைய குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட இதுவும் ஒரு காரணமாகின்றது

இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும் தன்மை நாவிற்கு கிடைக்கும்.

வயிற்றுப் போக்கு குணமாக
கறிவேப்பிலை - 20 கிராம் ; சீரகம் - 5 கிராம்
இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்கண் பார்வை தெளிவடையும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும், கை கால் நடுக்கத்தைப் போக்கும், வீக்கம், கட்டிகள் போன்றவற்றைக் குணப் படுத்தும்,  நகங்களில் ஏற்படும் நோய்களைக் குணப் படுத்தும்.

இவ்வளவு மருத்துவப் பயன்களைக் கொண்ட கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம். ....நன்றி: நக்கீரன்
அனைவரின் வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய ஒன்று. செடி வைக்க இடம் இல்லாதவர்கள் தொட்டிகளில் வைத்து வளர்த்து வாருங்கள். தினமும் பிரெஷான இலைகளை பறித்து சமையலில் சேர்த்து பயன் பெறுங்கள் . ஆரோக்கியம் என்பது வெளியில் இல்லை நம் வீட்டில் இருக்கிறது 

1 comment:

  1. Eumaxindia Pvt Ltd - Offering Dinamalar News Paper Advertisement Services in Chennai, Tamil Nadu Know the benefits of booking ads with affordable rates.

    Dinamalar Newspaper Ad Booking in Chennai

    ReplyDelete