Showing posts with label top 10. Show all posts
Showing posts with label top 10. Show all posts

Tuesday, October 23, 2012

அம்மை நோய் தணிய வேம்பு AZADIRACHTA INDICA

அம்மை நோய் தணிய வேம்பு AZADIRACHTA INDICA
பொதுவான குணம் வேம்பு என்பது வேப்ப மரம் தான். இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். இது சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம்.  பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள். வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம். இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
வேறுபெயர்கள் பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி
ஆங்கிலப் பெயர் AZADIRACHTA INDICA. தாவரக்குடும்பம் - MELIACEAE
மருத்துவக் குணங்கள்
வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.
வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.
வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.
வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.
வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.
உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீல் வாதம் தீரும்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.
3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.
50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.
வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.
வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.
வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.
வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி இவை குணமாகும்.
வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.
வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால்  மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.
வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.
எல்லாப் பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேம்பு வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும்.
வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர் நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.
நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.
காய சித்தியாகும் கடி யசிலேஷ்ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம் தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்தக்கும் வேம்பதற்கு தேர்.
-------------------------------------------------------------- அகத்தியர்.
குட்டநோய் பதினெட்டும் தீர்வதற்கு………
தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக் கிள்ளி
இன்பமுடன் தின்று வாயிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டுப் போகும்ப்பா அறிந்து கொள்ளே
கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
குட்டமென்ற பதினெட்டு வகையுந் தீரும்.
கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.
வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும்.
வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.
காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

Saturday, October 13, 2012

காமம் பெருக்கும் முருங்கை-MORINGA OLEIFERA



காமம் பெருக்கும் முருங்கை -MORINGA OLEIFERA
பொதுவான குணம் முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இதை பிரம்மவிரிட்சம் என்பர். இதன் மரக்கட்டை மென்மையாக இருக்கும். இதன் பயன் கருதி வேலி ஓரங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. இதன் மென்மையான ஈர்க்குகளில் கூட்டிலைகளையும் வெண்ணிற மலர்களையும் தக்கையான நீண்ட காய்களையும் சிறகுள்ள விதைகளையும் கொண்ட மரம். இந்த முருங்கையை ரோமானியர்களும், கிரேக்கர்களும், எகிப்தியர்களும் பயன் படுத்தியுள்ளார்கள். இதன் ஆரம்பம் இமையமலை அடிவாரம் பின் பாக்கீஸ்தான், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானீஸ்தான் ஆகும். பிலிப்பையின்ஸ்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லேண்ட், தாய்வானிலும் பயிராகிறது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஆனால் இதை வருடா வருடம் 3 அடி விட்டு கிளைகளை வெட்டி விடுவார்கள். இலை, பூ, காய் ஆகியவை சமையலுக்குப் பயன்படுவதால் தமிழகமெங்கும் காணப்படும். தற்போது 3 அடி நீளமான காய்கள் விடும் மரம் கூட உற்பத்தி செய்துள்ளார்கள். மலைகளிலும் காடுகளிலும் வளரும் முருங்கை கசப்பாக இருப்பதால் சமையலுக்கு உதவாது. தண்ணீர் அதிகம் தேவையில்லை, வெப்பத்தைத் தாங்கக் கூடியது. அதிக குளிரில் வளராது. தென் மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பலன் தரக்கூடிய மரவகைகளை வணிகரீதியாகப் பயிர் செய்து லாபம் அடைகின்றனர். முற்றிய கொம்புகளை 3 அடி உயரத்தில் வெட்டி நட்டு அதன் நுனியில் பச்சைச் சாணம் வைத்து உயிர் பிழைக்கச் செய்வர். விதை மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.
வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர் MORINGA OLEIFERA.  தாவரக்குடும்பம் :- MORINGACEAE.
மருத்துவக் குணங்கள்
இலைச்சாறு அதிக அளவில் வாந்தியுண்டாக்கும். சில வேலைகளில் மல மிளக்கும். இரும்புச்சத்து அதிகமுள்ள இலை. குருதியை தூய்மையாக்கும். ஈர்க்கு சிறுநீர் பெருக்கும். பூ காமம் பெருக்கும். பிஞ்சு தாது எரிச்சல் போக்கும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிக் காமம் பெருக்கும். பிசின் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். மூக்கில் நீரைப்பெருக்கித் தும்மல் உண்டாக்கும். காமம் பெருக்கும். பட்டை கோழை, காச்சல் நஞ்சு ஆகியவற்றைப் போக்கும். வியர்வையைப் பெருக்கும். குடல் வாயு அகற்றும், பட்ட இடத்தில் அரிப்பு உண்டாக்கிக் கொப்பளிக்கச் செய்து புண்ணுண்டாக்கும்.
முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப்படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும்.
பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான்.
இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டு வலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்.
முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வர தாது பலப்படும். ஆண்மைக் குறைவு தீரும். புளியை உணவில் நீக்க வேண்டும். எலுமிச்சம்பழச்சாறு சாப்பிடுதல் கூடாது. விந்தை நீர்த்துப்போக வைக்கும்.
இதன் இலைச் சாற்றைப் பிழிந்து பத்து மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். சிறந்த ஊட்ட மருந்து இதுவே.
உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.
பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காச்சிக் குடித்தால் ஆண்மை மிகும். போகம் நீடிக்கும். தாதுபுஷ்டி லேகியம் தேவையில்லை.
முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும். எலும்புருக்கி, சயம், சளி ஆகிய நோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது சிறந்த ஊட்டம் தரும்.
முருங்கைப்பட்டைத் தூள் 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றின் பொடி 2 கிராம் போட்டு வெந்நீரில் காயாச்சி மூன்று வேளையும் 30 மி.லி. அளவு கொடுக்க குடற்புண், காய்ச்சலாகிய டைபாய்டு குணமாகும். இருமல், கபம் தீரும்.
முருங்கைப் பட்டையும் வெண் கடுகையும் அரைத்துப் பற்றுப் போட வாதவலி தீரும். வீக்கம் குறையும்.
இதன் பிசினையுலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி பாலில் காலை, மாலை குடிக்க தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.


முருங்கைக் கீரை  ரத்த விருத்திக்கு எளிய உணவு




முருங்கை 

ரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது.  பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே.  மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே.
இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை.  இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள்.  இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம். 
முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர்.  முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.  வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.
பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்து வந்துள்ளனர்.  அதனால் அவர்கள் பலமுடன் போர் புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும்.  எளிதில் உடையும் தன்மை கொண்டது.  இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே, முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.
இது இந்தியா முழுமைக்கும் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை. 
முருங்கையின் அனைத்து பாகங்களுமே அதிக மருத்துவக் குணம் கொண்டது.
முருங்கை இலை
செரிமந்தம் வெப்பந் தெறிகுந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும்-மறமே
நெருங்கையிலை யொத்தவிழி நேரிழையே-நல்ல
முருங்கை யிலையை மொழி

- அகத்தியர் குணபாடம்
பொருள் -
முருங்கை இலையால் மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிநோய், மூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டுவந்தால் உடல் வலுப்பெறும்.  இரத்தம் சுத்தமடையும்.  இதில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும்.  மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.  அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.  

இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும்.  நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.  உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும்.  பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும்.  சருமத்தைப் பளபளக்கச் செய்யும்.  பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி.  தாய்ப்பாலை ஊறவைக்கும்.  வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வர வேண்டும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும்.
முருங்கைப் பூ
நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.   முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  பித்த நீர் குறையும்.  வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.  முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.  அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும்.
முருங்கைப் பிஞ்சு
முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.  இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும்.  எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.
முருங்கைக் காய்
அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது.  உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது.  அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்தான்முருங்கைக் காய். மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும்.  மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும்.  சளியைப் போக்கும். 

விதை
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில்  வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.  விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும்.  உடல் சூடு தணியும்.
இலைக்காம்பு
சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.
முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.  தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.  வறட்டு இருமல் நீங்கும்.    இரு பாலாருக்கும் நல்ல உடல் வன்மையைத் தரக்கூடியது.
முருங்கைப் பட்டை
முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். 
முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும்.  சிறுநீரைத் தெளிய வைக்கும்.
முருங்கை வேர்

முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும். வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல்இரைப்பு, முதுகுவலி நீங்கும். நன்குபசுமையாகவும், இளசாகவும் உள்ளமுருங்கைகாய்களை எடுத்து, இடித்து சாறு பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும். கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

இரத்தவிருத்திக்கு மாதுளை -PUNICA GRANATUM



இரத்தவிருத்திக்கு மாதுளை -PUNICA GRANATUM
பொதுவான குணம் மாதுளம் வளமான மண்ணில் நன்கு வளரும். இந்தியாவிலும் பல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது . இதன் தாயகம் இரான் இராக் பின் இந்தியா, பாக்கிஸ்தான்  பங்களாதேஸ்சைனாதெற்குஅரேபியா, ஆப்கானீஸ்தான், போன்ற நாடுகளுக்குப் பரவிற்று . இது ஒரு குறுமரம். இதுசுமார் 10 லிருந்து 25 அடி வரை வளரக்கூடியது . இதன் பூ சிகப்பாக இருக்கும் .மின்னும் சிவப்பாக மஞ்சள் கலந்த பச்சையாக பழங்கள் தோற்றம் தரும். பழத்தின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பு இருக்கும். பழத்துள் கெட்டியான விதைகள் சாறு நிறைந்திருக்கும். இனிப்பு, புளிப்புதுவர்ப்பு மூன்று வகையா கசாறுகள் இருக்கும். இவற்றின் உலர் த்தப்பட்ட விகைகளிலிருந்து நறுமணப் பொருள்கள் செய்கின்றனர் விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது
வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர் PUNICA GRANATUM.   தாவரக்குடும்பம் :- PUNIACACEAE.
மருத்துவக் குணங்கள்
மாதுளம் பிஞ்சைக் கொண்டு வந்து புளித்த மோரில் அரைத்துக் கலக்கி செரியாகழிச்சல், சீதக்கழ்ச்சல், நீர்நீராய் கழிதலுக்கும் தர கழிச்சல்கள் நிற்கும்.
மாதுளம்பழத்திற்கு `மாதுளங்கம்என்ற பெயரும் உண்டு .மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்புசர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது .உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய்நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.
இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்திகிடைக்கிறது .பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது .ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது .குடற்புண்களை (அல்சர்) குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்.
இதயநோய்கள், இதயபலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைகூடும்.
தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்தசக்தியை அடைய முடிகிறது.
மாதுளம் பழத்தோலுடன் வேலம்பட்டைத் தூளைக் கலந்து பல் துலக்கிவர பல்வலி, பல்லில் ரத்தம் கசிதல் நீங்கும்.
மாதுளம்பட்டை ச்சாறுவயிற்றிலுள்ள புழுக்களை வெளிப்படுத்தும்.
மூக்கிலிருந்து குருதி வடிவதை நிறுத்த மாதுளம்பூச் சாற்றுடன் அறுகம்புல் சாற்றையும் சம அளவுகலந்து தரலாம்.
மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்செரிச்சல், மந்தம், அடிக்கடிமயக்கம் போன்றவை நீங்கும்.
மாதுளம் பழச் சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சி யடையும். காய்ச்சல் தணியும். மாதுளம்பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும் .மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.
மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்து விடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதயவலி நீங்கிவிடும்.
பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரை மணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒருகிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்து க்கொண்டு மீண்டும் பாகு பதம்வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டுதினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்த நோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரியவிருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக் குப்பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும் .புதிய ரத்தம்  உற்பத்தியாகிவிடும்.
மாதுளம் பூக்களைமருந்தாகப் பயன்படுத்தும்போது, இரத்தவாந்தி, இரத்தமூலம் வயிற்றுக்கடுப்பு, உடல்சூடுதணியும்.இரத்தம்சுத்தியடையும், இரத்தவிருத்தி உண்டாகும்.
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன் றுதினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்றுவிடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம்பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும் போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சியதை, காலைநேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப்பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.
மாதுளம்பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்ப நோய்தீரும் .மாதுளம் பூக்கள் அறுகம்புல்மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டுவேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசுவெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.
அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் நீங்க மாதுளம் பூச்சாறு 300 கிராம் சேகரித்து அதில் 200 கிராம் பசுநெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப் பாதிப்பு, படிப்படியாகக் குறைந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூல நோயும் நீங்கும்.

 நன்றி-டாக்டர் கி.கூத்தரசன். பி.எஸ்.எம். எஸ்.

நோய்களை மிரட்டும் பேய்மிரட்டி-ANISOMELES MALABARICA

நோய்களை மிரட்டும் பேய்மிரட்டி - ANISOMELES MALABARICA

பொதுவான குணம் இது தமிழகமெங்கும் தானே வளர்கிறது. எதிரடுக்கில் அமைந்த வெளிரிய வெகுட்டல் மணமுடைய நீண்ட இலைகளையும் வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும்உடைய செடி. சுமார் மூன்றடி உயரம் வளரும். வரட்ச்சியைத் தாங்கக்கூடியது. விதை மற்றும் தண்டுகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
வேறுபெயர்கள் இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய்மிரட்டி, எருமுட்டைப் பீ நாறி, சற்று வட்டமான இலையுடைய இனம் ஒற்றைப்பேய் மிரட்டி எனவும், வெதுப்படக்கி எனவும் அழைக்கப்படுகிறது.
ஆங்கிலப் பெயர் ANISOMELES MALABARICA. தாவரக்குடும்பம் : LAMIACEAE.
மருத்துவக் குணங்கள்
பசி மிகுத்தல், குடல் வாயுவகற்றல்,வியர்வை பெருக்குதல், காச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றைசுருங்கச் செய்தல், அசிவு தணித்தல் ஆகிய குணங்களையுடையது.
பேய் மிரட்டியினால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம் போம்.
பேய்மிரட்டிப் பூண்டால் கழிச்சல், மாந்த சுரம், வீக்கம், பேய்மிரட்டு என்னும் படியான கிரக தோஷம் முதலியன போம் என்க.
உபயோகிக்கும் முறை -: இதன் சமூலம் கசப்புச் சுவையுள்ளது இதைக் கியாழமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி, இருமல், சீதசுரம்போம். ஒரு பலம் சமூலத்தைத் தட்டி ஒரு மட்குடுவையில் போட்டு அரைப்படி சலம் விட்டு 1/8 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை கொடுக்கலாம். அல்லது கால் ரூபாய் எடை ஓமத்தையும் கால் ரூபாய் எடை மிளகையும் ஒரு புது சட்டியில் போட்டு அடுப்பிலேற்றி வறுத்துக் கரியான சமயம் கால் படி சலம் விட்டு ஒரு பலம் பேய்மிரட்டி இலையைக் குறுக வரித்து சேர்த்து நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 3 வேளைகொடுக்கலாம். இத்தகையக் கியாழங்கள் குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் சமயம் காணுகின்ற பேதியைக் குணப்படுத்த இன்றியமையாத தாகும். இதன் மூலத்தை ஒரு பெரிய பாண்டத்தில் போட்டுச் சலம் விட்டு கொதிக்க வைத்து வேதுபிடிக்கச் சுரம், தலைவலி முதலியன போம்.
இலையைக் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாதசுரம் தீரும்.
இலைச் சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி தீரும்.
இலையை நீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடிக்கச்சீத வாதசுரம், முறை சுரம், மலக்கழிச்சல் தீரும்.
ஒரு பிடி நெற்பொறி, 2 இலை நீரில் காய்ச்சி மணிக்கு ஒருமுடக்குக் கொடுத்து வரக் காலரா தீரும்.
10 கிராம் மிளகையும் 3 கிராம் ஓமத்தையும் புது சட்டியிலிட்டுவறுத்துக் கருகிய சமயம் அரை லிட்டர் நீர் சேர்த்துகொதிக்கும் போது 40 கிராம் பேய் மிரட்டி இலைகளைச்சிதைத்துப் போட்டு 125 மி.லி. யாகக் காய்ச்சி 15 மி.லி.யாக மூன்று வேளை கொடுத்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.
இந்த இனத்தில் இலை நீளமாக இருப்பதை இரட்டைப் பேய்மிரட்டி என்றும் இலை வட்டமாக இருப்பதை ஒற்றைப் பேய் மிரட்டி என்றும் கூறுவதுண்டு. இவை முறையே ஆண் பெண் எனக் கருதப்படுகின்றன. ஆண் பிள்ளைகளுக்குக் காணுகின்ற நோயிக்கு பெண் இலையும் பெண்களுக்குக் காணுகின்ற நோய்களுக்கு ஆண் இலையும் சிகிச்சைக்கு ஏற்றது என்பது அறிவாளர்களின் கருத்து.


பேய்பூதகண தோஷங்களுக்கு வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து அடிப்பதைப் போல் பேய் மிரட்டி இலைகளையும் கத்தையாகக் கட்டிக் கொண்டு அடிப்பது வழக்கம் ஆகையால் இது பேய் மிரட்டி எனக் கூறப்பட்டது.
பேய் மிரட்டியின் இலையானது வெதுப்படக்கும் என்றும் வெளுப்பான பேதி, கிலேஷ்மகிரகணி, தாபம், ரூட்சை,அள்ளு மாந்தம், வாதாதிக்கம், உட்சுரம், ரத்த தாதுவிலுண்டாகின்ற மலினம் ஆகியவற்றைப் போக்கும் என்க.

பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கின் திரியாகப் போட்டு விளக்கேற்றி வைத்தால் பச்சை இலை எறிகிறது. உண்மைதான். சந்தேகம் உள்ளோர் பரிசோதனை செய்து பார்க்கலாம்.