Thursday, September 27, 2012

காய்ச்சல் போக்கும் நிலவேம்பு Andrograpis paniculata

காய்ச்சல் போக்கும்  நிலவேம்பு 

Andrograpis paniculata
கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும் உடைய சிறுசெடி இனமாகும். கொப்பும் கிளையுமாக 2 1/2 அடி வரை வளரும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. காய்ச்சலைப் போக்கவும், பசி உண்டாக்கவும் தாதுவைப் பலப்படுத்தவும், முறை நோயைப் போக்கும் குணமும் உடையது. எல்லா மண்ணிலும் தானாகவே வளரக்கூடியது.
வேறு பெயர்கள்: சாகண்ட தித்தம், நித்தார கோசா, கிராதித்தம், கிரார்த்தம், பூ நிம்பர், சாரி தீர்த்தம், கயிராதோ, லேமசனம், சிலேத்து மாதி சோபாக்னி.
ஆங்கிலப் பெயர் : Andrograpis paniculata, Nees
மருத்துவக் குணங்கள்:
நில வேம்பு இலை, கண்டங்கத்திரி வேல் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து, சுக்கு 10 கிராம், சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர, மலேரியா காய்ச்சல் குணமாகும்.
நிலவேம்பு இலையுடன், குப்பை மேனி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலிலோ அல்லது ஆட்டுப் பாலிலோ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மஞ்சள் காமாலை குணமாகும்.
நில வேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்திக்கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவாக மூன்று வேளை குடித்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.

குடல் புண்ணைக் குணமாக்கும் மணத்தக்காளி Solanum Nigrum

குடல் புண்ணைக் குணமாக்கும் மணத்தக்காளி

Solanum Nigrum

கொப்பும் கிளையுமாக 3 அடி வரை செழுமையாக வளரும். வேர்கள் கொத்துச் செடிகளுக்கு இருப்பதுபோல இருக்கும். மிளகைவிட சற்றுப் பெரிய காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். இது சிறுசெடி இனம். இதைக் கீரையாகவும் பயன்படுத்தலாம். தமிழகம் எங்கும் மழைக் காலத்தில் ஈரப் பசை உள்ள இடங்களிலும் தோட்டங்களிலும் தானாகவே வளரும். இதில் கருப்பு, சிவப்பு என இரு வகையுண்டு. இரண்டுக்கும் பெரிய வேற்றுமை இல்லை.
வேறு பெயர்கள்:
மணித்தக்காளி, மிளகுத் தக்காளி, உலகமாதா, விடைக்கந்தம், கண்ணிகம், காகதேரி, காளி, துகமாசி, குட்டலத் தக்காளி, வனங்காத்தாள், காகசிறுவாசல், ரெத்தத்திர மானப் பழத்தி, சுரனாசினி, வாயசம், காமமாசி.
ஆங்கிலத்தில்: Solanum Nigrum.
மருத்துவக் குணங்கள் :
இதன் பழத்தைச் சுத்தம் செய்து கொஞ்சம் தயிர் கலந்த உப்பில் சிறிது நேரம் ஊற வைத்து வெயிலில் காய வைத்து கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்தவும். இதை வற்றலாக எண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டுவர, உடல் சூட்டைச் சமப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கும். ஆனால் வயிற்றுக் கழிச்சல் உள்ளவர்கள் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
இதன் கீரையை உணவுடன் சேர்த்து உண்டு வர மூலம் நாளடைவில் குணமாகும்.
மணத்தக்காளி இலைச் சாறுடன் சிறிது நெய் கலந்து பூசிவர அக்கி குணமாகும்.
மணத்தக்காளி சாறு 50 கிராம் அளவு எடுத்து அத்துடன் காயத்துண்டு பொடியுடன் சேர்த்து 2 முறை குடித்துவர இடுப்பில் வலி, பிடிப்பு குணமாகும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்து அதில் சிறிது நெய்விட்டுக் காய்ச்சி தண்ணீர்ப்பதம் நீங்கியவுடன் அதை வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்துவர ஈரலில் உள்ள வீக்கம், குடல்புண் நெஞ்சு எரிச்சல், வயிற்றில் உள்ள கட்டிகள் கரையும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்துக் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர உடம்பில் உள்ள துர்நாற்றம் பேதியாகி வெளியேறும். இதே ரசத்தில் சிறிது தேன் கலந்து வாய் கொப்பளிக்க நாள்பட்ட வாய்ப்புண் ஆறும்.
மணத்தக்காளி இலையைக் கசக்கி 1/2 சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர, மலபந்தம் நீங்கும்.

ஆஸ்துமாவுக்கு நொச்சி! Verbenaceae

ஆஸ்துமாவுக்கு நொச்சி!
Verbenaceae
மூன்று அல்லது ஐந்து கூட்டு இலைகளை எதிர் அடுக்கில் பெற்ற சிறுமர வகையைச் சேர்ந்தது. இலைகள் வெகுட்டல் மணம் உடையவை. இலை சிறு நீர் பெருகுவதற்கும் நோய் நீக்கி உடலைத் தேற்றுவதற்கும் மாதவிலக்கை ஒழுங்கு செய்வதற்கும் நுண் புழுக்களைக் கொல்லுவதற்கும் பயன்படுகிறது. பட்டை, காய்ச்சல் போக்கும். தமிழகம் முழுவதும் தானாகவே வளரும்.
வேறு பெயர்கள்: அக்கினி, அதிக நாரி, அணிஞ்சில், அதிகனசி, அதி கற்றாதி, அதியூங்கி, அரி, கொடிவேலி, சிற்றாமுட்டி, செங்கோடு வேலி, முள்ளி.
வகைகள் : கருநொச்சி, வெறி நொச்சி.
கருநொச்சி : இலைகள், பட்டைகள் கருப்பு நிறமாக அமைந்து இருக்கும். இதன் இலைகள் உள்ளங்கையளவு நீள அகலத்தில் இருக்கும்.
ஆங்கிலத்தில் : vitex negundo, liss; Verbenaceae.
மருத்துவ குணங்கள்:

நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.
நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.
நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.
நொச்சி இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, மிளகுத்தூள் 1 கிராம், சிறிது நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்து, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். (இச்சா பத்தியத்துடன், பாகற்காய், அகத்தி, மீன், கருவாடு நீக்கி உணவு உட்கொண்டு தீவிர ஆசையைத் தவிர்க்க வேண்டும்).
நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தொடை, நாயுருவி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண் கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் குணமாகும். வாரத்துக்கு 2 முறை செய்யலாம்.
நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும்.
நொச்சி இலைச் சாறு 5 மில்லியளவு எடுத்து பசுங் கோமியம் 5 மில்லியளவுடன் கலந்து 2 வேளை குடித்து வர கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குணமாகும்.
நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்துவிடும்.
நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும்.

வயிறு உபாதைக்கு திப்பிலி Piperaceae

வயிறு உபாதைக்கு திப்பிலி  Piperaceae

திப்பிலி குறுகிய நீண்ட வடிவிலான இலைகளைக் கொண்ட சிறு மர இனமாகும். இதன் காய் முள் வடிவத்தில் நீண்டு இருக்கும். இதுவே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் வீடுகளிலும் தோட்டங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
வேறு பெயர்கள்: உண்சரம், உலவை நாசி, சாமன், குடாரி, கோலகம், கோலி, கோழையறுக்கா, சரம்சாடி, துளவி, மாகதி, கணை, செüண்டி, சூண்டுகி, கணம், கலினி, பாணம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்து.
வகைகள் : ஆனைத் திப்பிலி, அரிசித் திப்பிலி.
ஆங்கிலத்தில் : Piperlongum, linn, Piperaceae
மருத்துவ குணங்கள்:
திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.
திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.
திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.
திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.
திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்.
திப்பிலிப் பொடி 50 கிராம், கடுக்காய்ப் பொடி 25 கிராம் எடுத்துத் தேனில் கலந்து 2 தேக்கரண்டி வீதம் 2 வேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர இளைப்பு நோய் குணமாகும்.
திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.
திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாய்வு குணமாகும்.
திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.

நீர் எரிச்சல் குணமாக காக்கரட்டான்

நீர் எரிச்சல் குணமாக காக்கரட்டான்-சங்குப் பூ


கூட்டு இலைகளையும், நீல நிற மலர்களையும் கொண்ட ஏறு கொடி இனமாகும். இதன் காய்கள் தட்டையாக இருக்கும். வெள்ளைப்பூ பூக்கும் காக்கரட்டான் கொடியே மிகுந்த மருத்துவக் குணம் கொண்டது. இலை, வேர், விதை ஆகியவை மருத்துவக் குணம் கொண்டவை. தமிழகம் எங்கும் வேலிகளில் இயற்கையாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள் : மாமூலி, காக்கணம், காக்கட்டான், சங்குப் பூ.
வகைகள் : கறுப்பு காக்கரட்டான், வெள்ளை காக்கரட்டான்.
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிச் சாறு, தேன் சம அளவாக எடுத்து கலந்து 1 தேக்கரண்டியளவு (5 மில்லி) 2 வேளை குடித்து வர உடல் சூடு தணிந்து, இரவிலும் மற்றும் மழைக்காலத்தில் வருகின்ற அதிகப்படியான வியர்வை நீங்கும்.
காக்கரட்டான் பச்சையாக இருக்கும் வேர் 40 கிராம் ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லி வீதம் 2 மணிக்கு ஒரு முறை வீதம் 6 தடவை குடித்து வர காய்ச்சல், தலை வலி குணமாகும்.
காக்கரட்டான் வேரைப் பாலில் அவித்து, பாலோடு அரைத்துச் சுண்டைக்காய் அளவு 2 வேளை 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வர மேக வெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர்ப் பாதை அழற்சி, நீர் எரிச்சல் குணமாகும்.
வெள்ளை காக்கரட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழா நெல்லிச்ச மூலம், பெரு நெருஞ்சில் இலை, அருகம்புல் வகைக்கு ஒரு கைப்பிடியளவுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் தயிருடன் கலந்து குடிக்க எவ்வளவு நாட்பட்ட வெள்ளை ஒழுக்காக இருந்தாலும் குணமாகும்.
காக்கரட்டான் விதையை நெய்யில் வறுத்து இடித்துப் பொடியாக்கி 1/2 சிட்டிகை அளவு வெந்நீருடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர இழுப்பு, மூர்ச்சை, நரம்பு இழுப்பு குணமாகும்.
காக்கரட்டான் விதைப் பொடி 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குப் பொடி 25 கிராம் கலந்து தினமும் காலையில் மட்டும் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர மலப்போக்கு அதிகமாகி, யானைக்கால் வீக்கம் படிப்படியாக குறையும். மேலும் காக்கரட்டான் இலையை விளக்கெண்ணையில் வதக்கிக் கட்ட வீக்கம் குறைந்து வரும்.
வெள்ளைக் காக்கரட்டான் வேரை தயிர் விட்டு அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டுவிட்டு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் பசும் மோர் வரை குடிக்க 6 அல்லது 8 முறை பேதியாகும். மோரைக் குடித்தால்தான் பேதியாகும். பகலில் தயிர்ச்சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட ஒரே நாளில் வெள்ளை குணமாகும்.

நோய்களைத் துரத்தும் துத்தி!

நோய்களைத் துரத்தும் துத்தி!

Abutilon indicum
இதய வடிவ இலைகளையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும், தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில் மென்மையான கணையுண்டு. உடலில் பட்டால் சற்றே அரிக்கும். இது 4 அடி வரை வளரக் கூடியது. பூக்கள், அச்சு முறுக்கு அல்லது தாமரைப் பூ போன்று அமைந்திருக்கும். துத்தியின் இரண்டு காய்ந்த காய்களை ஒன்றோடு ஒன்று இரு தலையையும் அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மழைக் காலத்தில் தானாகவே இது வளரும். இதன் பூ இரத்தப் போக்கை நிறுத்தவும். காமம் பெருக்கியாகவும் செயல்படக் கூடியது. விதை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் குணம் உடையது. துத்தியில் பலவகைகள் இருந்தாலும் பசும் துத்தி, ஐந்து இதழ் துத்தி மற்ற துத்திகளை விட சிறந்த மருத்துவக் குணம் கொண்டது.
வேறு பெயர்கள்: ஆனைக் கன்று, இயாகதம், ஐ இதழ், பணியார துத்தி.
வகைகள்: ஐந்து இதழ் துத்தி, ஒட்டுத் துத்தி, சிறு துத்தி, பசும் துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி, எலிக்காது துத்தி, முடக்கு துத்தி, நாம துத்தி, ராத்துத்தி, பெரும்துத்தி, வயிற்றுத் துத்தி, ரண துத்தி.
ஆங்கிலத்தில்:Abutilon indicum; G.Don;
மருத்துவக் குணங்கள்
ஐந்து பெரிய துத்தி இலைகளை எந்தக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் உள்ள வெள்ளை வெட்டை நீங்கும்.
துத்தி இலையை காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120 நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை, புலால் நீக்க வேண்டும்)
துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும்.
துத்தியிலையையும், வேலிப் பருத்தி இலையையும் சம அளவாக எடுத்து அனைத்து சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து வாயில் நன்றாக வைத்துக் கொப்பளித்து துப்பிவிடவேண்டும். இப்படிச் செய்வதால் பல் வலி, கூச்சம் போன்றவை குணமாகும்.
துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும்.
துத்தியிலையின் பூவை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கலந்து அரைத் தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர காசம், நுரையீரல் கபம், இரைப்பு, இரத்த வாந்தி குணமாகும்.
துத்தியின் விதையை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் எடுத்து, கற்கண்டு பொடி 5 கிராம் சேர்த்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கருமேகம், வெண்மேகம், உடல் சூடு, மேக அனல் குணமாகும்.
துத்தியின் விதையைப் பசுவின் பால் விட்டு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர, கை, காலில் படர்கின்ற கருமேகம், குட்டம், வெப்பு குணமாகும்.
துத்தியிலையைக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது பாலும், சர்க்கரையும் சேர்த்து காப்பி குடிப்பது போலக் குடித்து வர, மேகச் சூடு தணியும்.
துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும்.
துத்தி வேர் 60 கிராம், திராட்சை 30 கிராம் இவற்றைச் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது நெய் சேர்த்துச் சாப்பிட நீர்ச் சுருக்கு நீங்கும்.
துத்தியிலையை அரைத்து பருக்கள் மீது தடவி வர அல்லது துத்தியிலையில் காடி சேர்த்து அரைத்து பருக்கள் மீது கட்டி வர பருக்கட்டிகள் உடைந்து குணமாகும்.

இருமல் குணமாக கற்பூரவள்ளி!

இருமல் குணமாகற்பூரவள்ளி!

இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.
வேறுபெயர்கள்: ஓம்வள்ளி
மருத்துவ குணங்கள் : கற்பூரவள்ளி இலையை அடையாகச் செய்து சாப்பிட்டு வர செரிமாணக் கோளாறுகள் நீங்கும்.
கற்பூரவள்ளி இலையை மென்று தின்று வர மூச்சுத் திணறல் போகும். (நாக்கில் கொஞ்சம் சுறுசுறுப்பு ஏற்பட்டு லேசான வெளிர் காரம் இருக்கும். இதனால் எந்தத் தீமையும் இல்லை.)
கற்பூரவள்ளி இலை, முசுமுசுக்கை, தூதுவளை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து நல்லெண்ணெய் அல்லது பசும் நெய்விட்டு வதக்கி பின்னர் அரைத்து வைத்துக்கொண்டு அமுக்கிரா, சுக்கு, மிளகு, சேர்த்து சமஅளவாக எடுத்துப் பொடிச்செய்து, ஒரு கடாயில் மாவுப் பொடிக்குத் தகுந்தவாறு நெய் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். நெய் காய்ந்தவுடன் அதில் பொடியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கிளறிக் கொண்டே வரும்போது விழுதையும் சேர்த்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டையும் கலந்து கிளறிக்கொண்டு இறக்கி வைத்து நெல்லிக்காய் அளவு 2 வேளை சாப்பிட்டுவர இழுப்பு சளி, இருமல் குணமாகும்.
கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.
கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும்

கக்குவான் இருமல் குணமாக நஞ்சறுப்பான்!

கக்குவான் இருமல் குணமாக நஞ்சறுப்பான் !



Asciepiadaceae
எதிர் அடுக்குகளில் முட்டை வடிவ இலைகளைக் கொண்ட சிறிய பூங்கொத்துக்களை உடைய வேலிகளில் படரும் சுற்றுக்கொடி இனம் நஞ்சறுப்பான். பஞ்சுடன் கூடிய முட்டை வடிவ விதைகளைக் கொண்டு இருக்கும். வேர், இலை மருத்துவக் குணம் உடையது. வாந்தியை ஏற்படுத்தும், வியர்வையை அதிகமாக்கும், கோழையை அகற்றும் குணம்கொண்டது. தமிழகமெங்கும் எல்லா மண்வளத்திலும் வேலிகளில் தானாகவே வளரக்கூடியது.
வேறுபெயர்கள் : கொடிப்பாலை, கறிப்பாலை, நஞ்சுமுறிச்சான் கொடி, கொண்ணி.
ஆங்கிலப்பெயர்: Tylophorqosthmatice; W&A; Asciepiadaceae
மருத்துவ குணங்கள் : நஞ்சறுப்பான் இலையை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து வெந்நீரில் 3 வேளைக்கு சாப்பிட வியர்வை பெருகும். சளியைப் போக்கும். சீதக்கழிச்சல், நீர்த்தக்கழிச்சல் குணமாகும்.
நஞ்சறுப்பான் இலைச்சூரணம் 150 மில்லியளவு எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை கொடுத்துவர குழந்தைகளுக்குக் காணும் கக்குவான் இருமல் குணமாகும்.
நஞ்சறுப்பான் இலை, நொச்சி, தைல இலை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைக்கனம், தலைவலி, உடல்கனம், இருமல், சளி, இளைப்பு குணமாகும்.
நஞ்சறுப்பான் இலையை அரைத்து எலுமிச்சம்பழம் அளவு சாப்பிடக்கொடுத்து, கடிவாயிலும் வைத்துக்கட்ட வாந்தியாகி எந்தவிதமான நஞ்சும் முறியும் (மயக்க நிலையில் இருந்தால் நஞ்சறுப்பான் வேர்ப்பொடியை கொடுக்கலாம்.)
நஞ்சறுப்பான் சமூலத்தை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதே அளவு மிளகுப்பொடி கலந்து 5 கிராமாக 2 வேளை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்துவர பாதரசம், ரசக்கற்பூரம், சவ்வீரம் போன்ற பாசாணங்களின் வீறு தணியும். உப்பில்லாத மோர் உணவு சாப்பிட வேண்டும். இதே பொடியை அரை கிராம் அளவிற்கு 3 வேளையாகத் தொடர்ந்து சாப்பிட்டுவர மேக வாய்வுப் பிடிப்புகள் குணமாகும்.
நஞ்சறுப்பான் பூண்டை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைமுழுகிவர மண்டைக்குத்தல் குணமாகும்.

மூல நோய் போக்கும் அந்தரத் தாமரை

மூல நோய் போக்கும் அந்தரத் தாமரை

Pistia Steteotes
அடுக்கு அடுக்காய் வைத்தாற்போல இலைகளைக் கொண்டது அந்தரத் தாமரை. நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடி இனமாகும். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. இலைகளே மருத்துவக்குணம் உடையவை. உடலிலுள்ள வெப்பத்தைத் தணித்தும், தாகத்தை அடக்கியும், தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் குளம், குட்டைகளில் தானாகவே வளர்கின்றது.
வேறுபெயர்கள்: அவை, ஆகாயமூலி, ஆகாயத்தாரை.
ஆங்கிலத்தில்: Pistia Steteotes, Linn, Areceae.
மருத்துவக் குணங்கள்:
அந்தரத் தாமரை இலையைச் சுத்தமாகத் தேய்த்துக் கழுவி சாறு பிழிந்து 20 மில்லியளவு எடுத்து அதில் சிறிதளவு வெங்காயத்தைச் சாறு பிழிந்து 2 வேலை குடித்து வர சொருக்கு மூத்திரம் கட்டுப்படும்.
அந்தரத் தாமரை இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும்.
அந்தரத் தாமரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்துத் தொடர்ந்து கட்டிவர வெளிமூலம், ஆசனக்குத்தல் குணமாகும்.
அந்தரத் தாமரை இலையைச் சாறு பிழிந்து 100 மில்லியளவு எடுத்து அத்துடன் சிறிது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இளஞ்சூடாகக் காய்ச்சி சூடு பொறுக்கும் அளவு துணியில் தொட்டு வெளிமூல முளைப்பு, மூல வலி, மூல எரிச்சல் போன்றவற்றிற்கு ஒற்றடம் கொடுக்கக் குணமாகும்.
அந்தரத் தாமரை இலையை மட்டும் அரைத்து தொழுநோய் புண் உள்ளவர்கள் அதன் மீது போட்டு வர ஆறும்.
அந்தரத் தாமரை இலையை 2 கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் மீது இந்த இலையின் விழுதை வைத்துக் கட்ட ஆறும்.
அந்தரத் தாமரை இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒரு முறை தலைமுழுகி வர உடல் சூடு, கண் எரிச்சல், மூல நோய் குணமாகும்.
அந்தரத் தாமரையிலையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, கருங்குறுவை அரிசி மாவும் சம அளவாக எடுத்து கலந்து பிட்டவியல் செய்து எடுத்து நல்லெண்ணைய் விட்டுப் பிசைந்து 3 கரண்டியளவு சாப்பிடவும். அத்துடன், மாதுளங் கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில் வைத்துக் கட்டினால் மூலமுளை விழுந்து விடும்.

உடலைச் சமச்சீராக்கும் ஓரிதழ் தாமரை - Violaceae

உடலைச் சமச்சீராக்கும் ஓரிதழ் தாமரை Violaceae 

பொதுவான குணம் 
இது குற்றுச் செடி வகையைச் சேர்ந்தது. மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடையது. நல்ல வளர்ச்சியாக வளர்ந்தால் அரை அடி வரை வளரும். இதன் இலைகள் அரை அங்குலத்துக்குமேல் இருக்காது. இதற்கு தண்டுப் பகுதியில் இருந்து கிளைகள் ஏற்படாது. மேல் நோக்கியே வளரும் ஆற்றல் கொண்டது. இளஞ்சிவப்பு நிறமுள்ள ஒரே இதழ் மட்டும் உள்ள பூ இருக்கும். அதனால் இது ஓரிதழ் தாமரை என்று அழைக்கப்படுகின்றது. செடியின் எல்லாப் பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் தானாகவே வளரக் கூடியது. தாது வெப்பு அகற்றியாகவும் சிறுநீர்ப் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும் பயன்படுகின்றது.
வேறு பெயர்கள்: சூது, சூர்யகாந்தி, ரத்னபுருசு.
ஆங்கிலத்தில்: Ionidium suffruticosum; Ging, violaceae
மருத்துவக் குணங்கள்
ஓரிதழ் தாமரை இலையைப் பூவுடன் பறித்து அரைத்து நெல்லிக்காயளவு, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர இரத்தம் சுத்தமாகி உடல் பலம் பெறும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை நோய்கள் குணமாகும்.
இதன் இலையை மட்டும் தினமும் விடிவதற்கு முன்னர் சிறிதளவு மென்று தின்று பால் குடித்து வர 48 நாட்களில் தாதுபலம், அதிமூத்திரம், வெள்ளை வெட்டைச் சூடு, நீர் எரிச்சல், சிற்றின்ப பலவீனம் குணமாகும்.
ஓரிதழ் தாமரையின் சமூலம் எடுத்து அத்துடன் சங்கன் குப்பி இலை 5 சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் கருமை நிறம் மாறி வரும். மேலும் இதயம் பலமாகி இதயத் துடிப்பு, படபடப்பு குறைந்து உடலைச் சமச்சீராக்கும்.
ஓரிதழ் தாமரை இலை, கீழா நெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை மூன்றையும் வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் எருமைத் தயிரில் 10 நாட்கள் காலையில் சாப்பிட்டு வர நீர்த்தாரை ரணம், வெள்ளை ஒழுக்கு குணமாகும். (மருந்து செரிமானம் ஆன பிறகு காரமும், சூடும் இல்லாத உணவு உண்ணலாம்)
ஓரிதழ் தாமரை இலையையும் தாமரையுடன் காலையில் வெறும் வயிற்றில் தின்று வர (வழுவழுப்பான பசை போன்று தென்படும்) மேக வெட்டை (எயிட்ஸ்) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாளடைவில் குணமடைவர்.
ஓரிதழ் தாமரையோடு எலும்பு ஓட்டி இலையையும் சேர்த்து ஒரு கைப்பிடியளவு தினமும் காலையில் தின்று வர முகத்தில் எலும்புகளில் கீறல், உடைந்து இருக்கும் எலும்புகள் கூடிவரும்.
ஓரிதழ் தாமரையை இடித்துச் சாறு பிழிந்து 40 மிலி எடுத்து சிறிது சர்க்கரையைச் சேர்த்து காலையில் மட்டும் 3 நாள்கள் குடிக்க பெரும்பாடு நீங்கும். (இச்சா பத்தியம் இருக்க வேண்டும்).
ஓரிதழ் தாமரையும், நற்சீரகமும் சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப்பாக்கு அளவு 5 வேளை கொடுக்க சுக்கில பிரமியம் தணியும். (இச்சா பத்தியம் இருக்க வேண்டும்).
ஓரிதழ் தாமரை, வெந்தயம், விடத்தலை வேர், சுக்கு, வால்மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர அரிப்பு நீங்கும்.

காமாலை குணமாக ஆமணக்கு!

காமாலை குணமாக ஆமணக்கு!


ஆமணக்கு இலையைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்திக் காய வைத்துக் கொளுத்தி, சாம்பலை எடுத்து சுத்தமான தண்ணீரில் கலக்க வேண்டும். கலக்கிய நீரை மட்டும் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய தண்ணீரைக் காய்ச்சினால் இதில் உப்பு கிடைக்கும். இந்த உப்பை கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த உப்பை ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நொய்க் கஞ்சியில் கலந்து சிறிது பெருங்காயத்தையும் சேர்த்துக் குடித்து வர உடம்பு இளைத்து மெலிய ஆரம்பிக்கும். அல்லது இதே உப்பு, பார்லி, நெல்லி முள் சூரணம் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பருமன் குறைந்து வரும்.
தாய்மார்கள் ஆமணக்கு இலையில் நெய் தடவி அனலில் வாட்டி மார்புக் காம்பில் வைத்துக் கட்டி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.
ஆமணக்கு இலையைச் சின்னதாக அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து கட்டி வர மூலக் கடுப்பு, கீல் வாதம், வாத வீக்கம் குணமாகும்.
ஆமணக்குத் துளிரை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கித் தொப்புளில் வைத்து கட்ட, தீராத வயிற்று வலி குணமாகும்.
ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து 30 கிராம் காலையில் மட்டும் 3 நாள் சாப்பிட்டு நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிட காமாலை குணமாகும்.
ஆமணக்கின் வேரை லேசாக நசுக்கி சிறிது தேனுடன் பிசைந்து கொஞ்சம் நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து மறுநாள் காலையில் இதைப் பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு நீரை மட்டும் 100 மில்லியளவு தினமும் காலையில் குடித்துவர வயிற்றின் பளுவும், உடல் பருமனும் வீக்கமும் குறையும்.
விளக்கெண்ணெய் 30 மில்லியளவு எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலிலோ அல்லது இஞ்சிச்சாறு கலந்தோ குடிக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்று வலி குணமாகும்.
விளக்கெண்ணெய் 1/2 தேக்கரண்டியளவு குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் மலம் கட்டியுள்ளது இளக்கமாகி குடலை விட்டு வெளியேறும்.
குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெய்யுடன் பேயன் வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக அரிந்து ஊறப் போட்டு கற்கண்டைப் பொடி செய்து கலந்து தினமும் காலையில் 2 துண்டு வாழைப்பழமும் சிறிது எண்ணெய்யும் கொடுத்து வர சகல சூடும் தணிந்து ஆரோக்கியமாக வளரும்.

விஷம் முறிக்கும் ஆடு தின்னாப்பாளை!

விஷம் முறிக்கும் ஆடு தின்னாப்பாளை!

Aristolochiaceae

வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமாகும். முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களை உடையது. கால்நடைகள் மேய்ச்சக் காலில் ஒரு கடி கடித்து அசக்காமல் விடாது. ஆனால் இந்த இலையை மட்டும் நுகர்ந்து பார்த்துவிட்டு கடிக்காமல் விட்டு விடும். சிலர் ஆடாதொடை மூலிகையை ஆடு தின்னாப் பாளை என்று நினைப்பார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இதன் இலைகள் காம்புடன் கூடிய சாம்பல் கலந்த நிறத்துடன் மடிப்புச் சுருளுடன் இருக்கும். ஓரங்களில் கறுப்பு கலந்த பச்சையாக இருக்கும். இது கசப்பும், துவர்ப்பும் ஒருங்கே கொண்ட கிருமி நாசினித் தன்மையுடையது. இதனால் இதன் மலர்களும் இதே நிறத்தை ஒத்து இருக்கும். தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கின்றது. வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறு கால வலியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
வேறு பெயர்கள்: ஆடு தீண்டாப் பாளை, கத்திருயம், புழுக்கொல்லி, பங்கம், பங்கம் பாளை, வாத்துப் பூ.
ஆங்கிலப் பெயர்: Aristolochia bracteata, Retz, Aristolochiaceae.
மருத்துவக் குணங்கள்:

ஆடு தின்னாப் பாளையின் இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை வெந்நீரில் கலந்து குடிக்க, பாம்பு விஷம், சில்லறை விஷம், மலக் கிருமிகள், கருங் குட்டம், யானைத் தோல் சொறி குணமாகும்.
ஆடு தின்னாப் பாளையின் வேரை அரைத்து 2 வேளை 5 கிராம் வெந்நீரில் சாப்பிட வைத்து கடும் பத்தியத்தில் இருக்கச் செய்ய 3 நாளில் எல்லா விதமான பாம்பு விஷமும் முறிந்து விடும். (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல் சாப்பிடச் செய்து ஒரு நாள் முழுவதும் விஷம் தீண்டியவரை தூங்கவிடக் கூடாது.)
ஆடு தின்னாப் பாளையின் வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வலி நீங்கி சுகப் பிரசவம் ஆகும்.
இதன் விதைச் சூரணம் 5 கிராம் எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி, சூதகத் தடை, மலக் கிருமிகள் நீங்கும்.
ஆடு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.
இனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு, கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.
ஆடு தின்னாப் பாளை இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு 2 வேளை சாப்பிட்டு வர தோல் வியாதிகள், குட்டம், மலக்குடல் சம்பந்தமான வியாதிகள், சிறுநீரகத் தொற்றுகள் குணமாகும்.
ஆடு தின்னாப் பாளை, பறங்கிப் பட்டை, வெள்ளை மிளகு, பெரியா நங்கை, கீழாநெல்லி வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவாக தொடர்ந்து 2 வேளை சாப்பிட்டு வர கருங்குட்டம், வெண்குட்டம், சிறுநீர் வழியில் புண், தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி குணமாகும்.
ஆடு தின்னாப் பாளையிலைச் சாறு, துளசிச்சாறு சம அளவாக 100 மில்லியளவு எடுத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் குடிக்க சில வகையான விஷங்கள் முறியும்.
ஆடு தின்னாப் பாளை இலையைப் பொடியாக்கி, புகையிலையில் வைத்து சுருட்டு சுற்றிப் புகை பிடித்தால் சுவாச காசம் குணமாகும்.
ஆடு தின்னாப் பாளை இலை 100 கிராமும், மிளகு 10 கிராமும் எடுத்து அரைத்து மாத்திரைகளாகப் பட்டாணியளவு உருட்டிக் காய வைத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர மேக வாயு நீங்கும்.
ஆடு தின்னாப் பாளைச் சாறு 200 மில்லியளவு, நல்லெண்ணெய் 400 மில்லி சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 2 முறை தலை முழுகி வர மண்டைக்குத்து, தலைவலி நீங்கும்.
ஆடு தின்னாப் பாளைச் சமூலம், வசம்பு சம அளவாக எடுத்து இடித்து கட்டியின் மேல் வில்லையாக வைத்து அதன் அளவிற்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதன்மேல் வைத்து இப்படியாக 3 நாள் கட்ட அரையாப்புக் கட்டி கரையும்.
ஆடு தின்னாப் பாளைவேர், கவிழ்தும்பை வேர், வெள்ளருகு வேர், மருக்காரைவேர் சமஅளவாக எடுத்து அரைத்து உடம்பில் பூசி முறுக்கித் துவட்ட, கருவழலை, தண்ணீர் பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் முறியும்.

தேள் கடிக்கு நாயுருவி

தேள் கடிக்கு நாயுருவி

Achyranthes aspera
எதிர் அடுக்குகளில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி இனமாகும். இது இரண்டு அடி வரை வளரக் கூடியது. இதன் தண்டு, காம்பு செந்நிறம் உடையதாக இருக்கும். இதன் எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் உடையவை. சிறுநீர் பெருக்கவும், நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தவும், சதை, நரம்புகளைச் சுருங்கவும் செய்யும் மருத்துவக் குணம் உண்டு. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள்: அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.
வகைகள்: செந்நாயுருவி என்னும் இந்தவகையின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும். மருத்துவக் குணம் பெரும்பாலும் இதற்கு அதிகமாகவே காணப்படுகின்றது. ஆங்கிலத்தில் இதை Achyranthes aspera, Amarantaceze
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். நாயுருவி இலைகளில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.
நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.
நாயுருவி இலை, பனம்பாளை ஆண் இனம், பிரண்டையில் ஆண் இனம் இவற்றை நிழலில் காயவைத்து சம அளவாக எடுத்துக் கலந்து ஒரு தூய்மையான இடத்தில் அதை கொட்டி நெருப்பு வைத்து கொளுத்தி சாம்பலாக்க வேண்டும். இந்தச் சாம்பலுக்குத் தக்கவாறு கிணற்று நீரை ஊற்றி அலசி 3 தடவை களிம்பு நீக்கிய பாத்திரத்தில் ஊற்றி அசையாமல் 24 மணி நேரம் வைத்திருந்தால் வடிகட்டிய நீர் நன்றாகத் தெளிந்து இருக்கும். இந்த நீரை ஒரே வகையான விறகால் பதமாகக் காய்ச்சினால் உப்பு கடைசியில் கிடைக்கும். இந்த உப்பை நல்ல தடிப்பான தென்னம் மர சீமாரின் நுனியில் 2 முறை தொட்டு தேனிலோ அல்லது மோரில் கலந்து 2 வேளை கொடுத்து வர இரைப்பிருமல்(ஆஸ்துமா), பித்தம், எலும்புருக்கி நோய் நல்ல குணமாகும். தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதொடை இவற்றின் குடிநீர்களை துணை மருந்தாகக் குடிக்கலாம்.
நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.
நாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.
நாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். நாயுருவி விதையை 10 கிராம் எடுத்து அரைத்து 2 வேளை 2 நாட்கள் சாப்பிட்டு வர பேதி நிற்கும்.
நாயுருவி விதையை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 20 கிராம் எடுத்து, துத்திக் கீரையை வதக்கும் போது சேர்த்து உணவுடன் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும். நாயுருவி விதையைச் சோறு போல சமைத்து உண்ண பசி எடுக்காது. ஒரு வாரம் ஆயாசம் இல்லாமல் இருக்கலாம். பின்னர் மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க பசி உண்டாகும்.
நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கப் பல் தூய்மையாகி முகம் வசீகரம் ஆகும். நாயுருவி சமூலமும், வாழைச் சருகும், மூங்கில் குருத்தும் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு 400 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை குடிக்க, பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும்.

நஞ்சுக்கு எதிரி தும்பை!

நஞ்சுக்கு எதிரி தும்பை!

Lamiaceae
எதிர் அடுக்குகளில் அமைந்த கூரான நீண்ட கரும்பச்சை இலைகளையுடையது. இது இரண்டு அடிக்குமேல் வளராத சிறுசெடி இனமாகும். இதன் வேர்கள் மூன்று அங்குலத்துக்கு மேல் வளராத குத்துச் செடிக்கு எப்படி வேர் இருக்குமோ அதைப் போன்றுதான் இருக்கும். நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளை உடையது. இந்தத் தண்டுப் பகுதியின் அடியில் இருந்து வளர வளரக் குறுகலான பட்டை போன்று செல்லக்கூடியது. இந்தத் தண்டின் நுனியில் வட்ட வடிவில் காய் போன்ற முடிச்சு இருக்கும். அந்த முடிச்சில் பல அரும்புகள் தேன்கூடு போல அடுக்கி வைத்தாற்போல் இருக்கும். அந்த முடிச்சின் அரும்பில் இருந்து பாத வடிவிலான தேன் நிறைந்த வெண்மையான நிறத்தை உடைய சிறு மலர்கள் பூத்திருக்கும். அதே அரும்பில் 4 இலைகள் எதிர்த்து எதிர்த்து விரிந்திருக்கும். இலைகள் அடியும் நுனியும் மெலிந்தது போன்று நடுப்பகுதி சற்று அகலத்துடன் காணப்படும். இலை, பூ மருத்துவக் குணம் உடையது. இலை கோழையை அகற்றவும், உடல் வலிமையைப் பெருக்கவும் கூடியது. வாந்தி உண்டாக்கும் மருத்துவக் குணம் உடையது. பூ முறைநோய் அகற்றும் குணம் கொண்டது. தமிழ்நாடெங்கும் மாரி காலத்தில் ஈரமுள்ள இடங்களில் தானாகவே வளரக்கூடியது.
வேறு பெயர்கள்: பொருகல், பழபாகல், வைகுண்டம், அதோமுகி, கடற்கொடி, சத்திரம்.
வகைகள்: பெருந்தும்பை, கவித்தும்பை, பேய்த்தும்பை, பித்தாருசம், சன்னிநாயகம்.
ஆங்கிலத்தில்: Leucas aspera, Spreng, Lamiaceae
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.
தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பிலாது சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி.
தும்பை இலை, கீழா நெல்லி இலை, சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.
தும்பைச்சாறு 1 மில்லியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து குடிக்கக் கொடுத்து, தேள் கொட்டிய கடிவாயில் தும்பையிலையை அரைத்துக் கட்ட விஷம் கீழே இறங்கும். கடுப்பும் நீங்கும்.
தும்பையிலை, குப்பைமேனி இலை, நாய்கடுகு இலை இவற்றைச் சமஅளவில் எடுத்து அரைத்து உடம்பில் பூசி 3 மணிநேரம் கழித்து வெந்நீரில் குளித்துவர நமது உடலில் பூச்சிக் கடியினாலோ, வேறு சில காரணத்தாலோ ஏற்பட்ட தடிப்பு, நமைச்சல், சொறி, சிரங்கு குணமாகும்.
நஞ்சுள்ளவை நம்மைத் தீண்டிவிட்டால் தும்பையிலைச் சாறு 50 மில்லியுடன் சிறியாநங்கை இலைச்சாறு 2 சொட்டு கலந்து குடிக்கக் கொடுக்க சிறிது நேரத்தில் வாந்தியும் பேதியும் உண்டாகி விஷம் முறிந்து குளிர்ந்த உடம்பு சூடாகி ஜன்னி நீங்கும்.
உடம்பில் சூடு ஏறுகிறது என்றால் விஷம் முறிகிறது என்று அர்த்தம். பேதி அதிகமானால் தயிர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு கொடுக்க பேதி நீங்கும். மேலும் விஷம் தீண்டியவர்களை 24 மணி நேரத்திற்குத் தூங்க விடக் கூடாது. எப்போதும் தலை மட்டும் உயரத்தில் இருக்க வேண்டும். தாழ்வாக இருக்கக் கூடாது.
தும்பையிலை, உத்தாமணியிலை சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து இருவேளை தொடர்ந்து குடித்துவர ரத்தப்போக்கு, தாமதமாகப்படுகின்ற மாதவிலக்கு சரியாகும்.
தும்பையிலைச் சாறு நாகதாழியிலைச் சாறு வகைக்கு 50 மில்லி அளவு எடுத்து கலந்து குடிக்க கருந்தேள், செந்தேள் ஆகியவற்றின் கொடிய விஷம் இறங்கும். கடித்த இடத்தில் சிவனார் வேம்பு இலையைக் கசக்கி அழுத்தித் தேய்க்க விஷம் தானாக இறங்கும்.
தும்பைப் பூ 50 கிராம் எடுத்து நல்லெண்ணெய் 50 மில்லி எடுத்து அதில் காய்ச்சி வடிகட்டி தலை முழுகத் தலைபாரம், நீரேற்றம் குறையும்.
தும்பை இலை, கீழாநெல்லி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சம அளவாக எடுத்து அரைத்து பாக்கு அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர எப்படிப்பட்ட நாள்பட்ட மஞ்சள் காமாலையானாலும் குணமாகும்.