Thursday, November 8, 2012

மூளை வளர்ச்சிக்கு முளைக்கீரை

மூளை வளர்ச்சிக்கு முளைக்கீரை

பொதுவான குணம்   

முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிரிடப்படும் ஒரு சிறந்த கீரையாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் இக்கீரை இதன் சுவைக்காகவும், மருத்துவச் சிறப்புக்காகவும் பயிரிடப்படுகிறது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது பயிரிடப்பட்ட நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது.

முளைக்கீரையும் தண்டுக்கீரையும் ஒன்றுதான் எனக் குறிப்பிடுகிறார்கள். இளம் நாற்றுக்களை முளைக்கீரை எனவும் வளர்ந்தனவற்றைத் தண்டுக்கீரை எனவும் குறிப்பிடப்படுகிறது.
முளைக்கீரை ஓர் குறுகிய காலப்பயிர். 45 நாட்கள் வரை வளரக் கூடிய கீரை. அதற்கு மேல் விட்டால் அந்தக் கீரையானது முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். இளங்கீரைகளையே பிடுங்கிப் பயன்படுத்த வேண்டும். தண்டுக் கீரையெனில் ஒரு நீண்ட நாள் பயிர். இது ஆறுமாத கீரை என அழைக்கப்பட்டாலும் 100-120 நாட்களுக்கு வளர்க்கலாம்.
100 நாட்களுக்கு மேல் ஆனால் கூட தண்டுக் கீரையின் தண்டு சமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். ஏறக்குறைய 100-லிருந்து 120 நாட்களுக்குட்பட்ட கீரைத் தண்டே மிகச் சிறப்புடையது. இக்கீரைத்தண்டு முளைக் கீரையைப் போல் வேகமாக வளராது. இளந்தண்டுகளில் அதிகக் கீரை இருக்காது.
செழிப்பான மண்ணில் வளரும் போது தண்டுகள் சிறிது கூட நார் இல்லாமல் சுவையாக இருக்கும். தண்டுக் கீரையின் இளங்கீரையைப் பிடுங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அது நன்கு வளர்ந்தபின் பயன்படுத்தினால் தான் அதிகளவு சாப்பிடக்கூடிய தண்டு இலை முதலியன கிடைக்கும்.
எனவே தண்டுக் கீரையை நன்கு வளர்ந்தபின் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் முளைக்கீரையோயெனில் முதிராமல் இளமையிலேயே அதாவது ஏறக்குறைய 45 நாட்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்.
கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும். வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும்.
முளைக்கீரையை விதைத்த பின்னர் 45 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு மேல் வளரவிட்டால் கீரை முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். உண்ணுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று. முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு ருசியைத்தரும். முளைக் கீரையை மற்றப் பருப்பு வகைகளுடன் சேர்த்துக் கூட்டாகவும், மசியலாகவும் செய்துண்ணலாம். இதனைப் பொறியல் செய்து சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்து உண்ண மிகச் சுவையாக இருக்கும்.
இக்கீரை ஒன்றே எல்லாவிதமான தாதுப்புக்களையும் தன்னுள் அடக்கியுள்ளது என்பது தெள்ளத் தெளிந்த உண்மையாகும். இதனை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக் கொள்வதால் ஒரு பூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் கொடுக்கக் கூடியது. முளைக்கீரை விதை, நன்கு உரமுள்ள நிலத்தில் நெருக்கமில்லாதபடி விதைத்து மேலே சிறிது மணலைத் தூவிவிடுதல் வேண்டும்.
இவ்வாறு விதைக்கப்பட்ட விதைகளின் மேல் வைக்கோலைப் போட்டு மூடி அதன் மீது பூவாளியைக் கொண்டு தண்ணீர் தெளிப்பது நல்லது. விதை விதைத்த உடனேயே தண்ணீர் தெளிப்பது மிகவும் முக்கியம். மூன்று நாட்களுக்குப் பிறகு மேலே மூடப்பட்ட வைக்கோலை நீக்கிவிட வேண்டும். நான்காம் நாள் விதைகள் நன்கு முளைத்துவிடும். முளைத்துவந்த செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் விடக்கூடாது.
விதைக்கப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு மழையில்லாமலிருப்பது நல்லது. அவ்வாறு மழை பெய்தால் முளைத்த கீரையெல்லாம் அழுகிக்கெட்டுப்போய் விடும். பதினைந்து நாட்கள் ஆன பிறகு வேண்டிய கீரைகளை அவ்வப்போது நெருக்கம் கலையும்படியாகச் சிறது சிறிதாகப் பிடுங்கிப் பயன்படுத்தலாம். களைகளை அகற்றி போதியளவு நீர்பாய்ச்சி வந்தால் 4 வாரத்திலிருந்தே கீரையைப் பிடுங்கிப் பயன்படுத்தத்தக்க நிலையை அடையும். 6 வாரத்தில் எல்லாக் கீரைகளையும் பறித்து விடலாம்.
உணவுக்காக கீரையைப் பறிக்கும் பொழுது கீரை பூக்குமுன் பறித்துவிடுதல் நல்லது. அப்போதுதான் கீரையின் தண்டு நார் இன்றி மென்மையாக இருக்கும். செடி பூத்துவிட்டால் தண்டுப் பாகம் முதிர்ந்து நார் பாய்ந்துவிடும். அடைமழை பெய்யும் காலம் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் இக்கீரையைப் பயிர் செய்யலாம்.
சிறுசிறு பாத்திகளில் ஆண்டு முழுவதும் பயிரிட்டுக்கொண்டே வரலாம். காலத்தே பறித்த முளைக்கீரையும் அதன் தண்டும் நாவுக்கு உருசியும், உடலுக்கு வலுவும் தருவதால் வீட்டுத் தோட்டத்தில் இக்கீரையைப் பயிரிட்டுப் பயன்பெறுவது சிறந்ததாகும்.
வேறுபெயர்கள்  இளங்கீரை
ஆங்கிலப் பெயர்
மருத்துவக் குணங்கள்
இக்கீரையுள் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தைச் சுத்தி செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லன. மற்றும் இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுச் சத்தாகும். எலும்பினுள்ளே அமைந்துள்ள ஊண் அல்லது மேதஸ்என்னும் மூளை வளர்ச்சிக்கு இம்முளைக் கீரையில் அமைந்துள்ள மணிச்சத்து பெரிதும் உதவுகின்றது.
முளைக் கீரையானது சிறந்த மருத்துவக் குணங்களைப் பெற்றிருக்கிறது. இதை சமையல் செய்துண்ண நாவுக்கு ருசியைக் கொடுப்பதோடு நல்ல பசியையும் கொடுக்கக் கூடியது.
இக்கீரையை நன்கு ஆய்ந்து அலம்பிச் சுத்தப்படுத்தி பாத்திரத்திலிட்டு சிறிது அரிந்த வெங்காயத்துடன் பச்சை மிளகாயைக் கூட்டி உப்பிட்டுக் கடைந்து உட்கொண்டால் உட் சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும். அத்துடன் கண் குளிர்ச்சியைப் பெறும்.
சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை யாவரும் உண்ணலாம். வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.
நல்ல மலமிளக்கியாகவும் அது விளங்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். முளைக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் இரத்தத்தை சுத்தி செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றன.
இக்கீரையில் மட்டுமே எல்லா விதமான தாது உப்புக்களும் உள்ளதால் இதை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஒரு பரிபூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் நாம் பெற முடியும்.

No comments:

Post a Comment