Friday, October 12, 2012

வயிற்றுபூச்சிக்கு சுண்டை SOLANUM TARVUM

வயிற்றுபூச்சிக்கு சுண்டை SOLANUM TARVUM

பொதுவான குணம் சுண்டை ஒரு பெருஞ்செடி இனத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5 அடி முதல் 10 அடி உயரம் கூட வளரக்கூடியது. எல்லா வித மண் வளத்திலும் வளரக்கூடியது. இதற்கு ஆங்கிலத்தில் TURKEY BERRYஎன்று சொல்வார்கள். சுண்டையில் இரு வகையுண்டு.  மலை காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும், தோட்டங்களிலும் சம வெளியிலும் வளர்வதை ஆனைச்சுண்டை அல்லது பால் சுண்டை என்றும் சொல்வர். அகன்ற இறகாக உடைந்த நேர் அடுக்கில் அமைந்த இலைகளையும் வெண்நிரப் பூங் கொத்துக்களையும், உருண்டையான காய்களையும் உடைய முள்ளுள்ள செடியாகும். பச்சைக் காய்கள் பழுத்தால் மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழம் காய்ந்தால் மரநிர வத்தலாக மாறிவிடும். ஒரு பழத்தில் சுமார் 200 விதைகள் இருக்கும். காய்  சற்று கசப்புடையது.  வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். இது உலகெங்கும் உள்ளது. இதன் தாயகம் புளோரிடா என்றும் மேற்கிந்தியாவிலும் பின் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அவாய், பசிபிக்தீவுகளிலும், நடு அமரிக்காவிலும், தென் அமரிக்காவிலும், பிரேசிலிலும் பரவியதாகக் கூறுவர். இதை இன விருத்தி செய்ய விதை மூலமாகவும், கிளைகளை வெட்டி வைத்து முறைப்படி வளர்த்தியும் பயிரிடுவார்கள்.
வேறுபெயர்கள் கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி
ஆங்கிலப் பெயர் SOLANUM TARVUM.   தாவரக்குடம்பம் :- SOLANACEAE.
மருத்துவக் குணங்கள்
சுண்டை கோழையகற்றியாகவும்,   வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், சுண்டைக் கசாயம் பாம்புக்கடி வீரியம் குறைக்கவும், நீரிழிவு நோய், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு முதலியன குணமாக்கக் கூடியது. மலேசியாவில் இதன் விதையை பல் வலி குறையப் பயன்படுத்துகிறார்கள். வியட்னாமில் இதன் இலையை மாதவிடாய் தொல்லைக்கும், தோல் வியாதியைப் போக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதன் பழம் சாப்பிட்டால் வயிற்றுவலி போகும்.
பால் சுண்டைக் காயைச்சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி முதலியன தீரும்.
உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில்  பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும். வயிற்றுப் போக்கு நின்று விடும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம்  ஆகியவை தனித்தனியே எடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை ஒரு டம்ளர் மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம், பசியின்மை, மார்ச்சளி, நீரிழுவு தீரும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.
இதன் வேர்ப்பட்டையை பொடிசெயுது தேய்காய் தொட்டியில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிலிட்டு உள் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக் குடச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு சம அளவு எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழப்பு நோய் தணியும்.
சுண்டை வேர்  ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாச்சல் குணமாகும்.
இதன் வத்தலை காயவைத்து அதனுடன் புளித்த மோர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து உணவுடன் உண்ண நீரிழிவு நோய் குறையும்.

No comments:

Post a Comment