Wednesday, October 10, 2012

அசுத்தம் நீக்கி தேகம் வலிவுள்ளதாக்க தூதுவேளை - Solanum Trilubatum



அசுத்தம் நீக்கி தேகம் வலிவுள்ளதாக்க தூதுவேளை - Solanum Trilubatum
பொதுவான குணம் தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது. வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு. சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும், ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்கள் சுண்டைக் காய் மாதிரி இருக்கும். சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி. இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
வேறுபெயர்கள் தூதுவளை, தூதுளம், தூதுளை
ஆங்கிலப் பெயர் Solanum Trilubatum; Solanaceae
மருத்துவக் குணங்கள்
இதன் பயனை வள்ளளார் கூறும்போது அறிவை விளக்குவதற்கும் கவன சக்தி உண்டு பண்ணுவதற்கும் கரணம் ஓய்வதற்கும் கபத்தை எரிப்பதற்கும் யோக்யதையுடைய ஒளஷதி தூதுவேளை தேகக் கெடுதியாகிய அசுத்தம் நீக்கி தேகம் வலிவுள்ளதாக நெடு நாளைக்கு இருக்கும். முக்தி அடைவதற்குச் சகாயமாயிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்திருந்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் அவர்கள் வெளியிடமாட்டார்கள்”.


இலை கோழையகற்றும், உடல் தேற்றிக் காமம் பெருக்கும். பூ உடலுரமூட்டும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும்.

தூதுவேளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.

இலையை நெய்யில் வதக்கி துவையலாக குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.

இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம் மார்புச் சளி நீங்கும்.
காயை உலர்த்தித் தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.
சமூலத்தை (வேர், இலை, பூ, காய்) 50 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை மாலை பருகி வர இரைப்பு, சுவாச காசச் சளி ஆகியவகை தீரும்.
ஆஸ்துமா மூச்சுத் திணறலில் பழத்தூளைப் புகைபிடிக்கச் சளி இளகி குணப்படும்.
நாள்தோறும் 10 பூவைக் காய்ச்சிப் பால், சர்க்கரைக் கூட்டி ஒரு மண்டலம் (45 நாட்கள்) பருக உடல் பலம், முக வசீகரம், அழகும் பெறலாம்.
தூதவேளை, கண்டங்கத்திரி, பற்படாகம், விஷ்ணுகாந்தி வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு 8-ல் ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளைக் குடிநீர்) ஒரு மணிக்கு ஒருமுறை 5 மி.லி முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் கப வாதச் சுரம் (நிமோனியா) சன்னி வாதச் சுரம் (டைபாய்டு) குறையும்.
தூதுவேளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். தூதுவேளை தோசை சாப்பிடலாம். தூதுவேளை கசாயம் குடிக்கலாம்.
தூதுவேளை, கண்டங்கத்திரி, திப்பிலி, இண்டு வேர் சேர்த்து 500 மி.லி தண்ணீர் ஊற்றி 100 மி.லி ஆக சுண்ட வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமடையும்.

தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.


குளிர் காலங்களில் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு ஏற்படும். தொண்டையில் முள் மாட்டியது போன்ற உணர்வும், கிச்..கிச்.. என்ற நெருடலும் ஏற்படும். இதெல்லாவற்றையும் நீக்க தூதுவளை அருமருந்தாகப் பயன்படுகிறது.

தூதுவளை இலை, தண்டு இவற்றிலுள்ள முட்கள் மற்றும் காம்பு, நடுநரம்பு ஆகியவற்றை நீக்கி நிழலில் உலரவைத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் 2 வேளை உணவுக்குப்பின் 1 கிராம் தூதுவளை இலைப்பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட மார்புச்சளி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல், மூக்கடைப்பு நீங்கும். நன்கு பசியும் ஏற்படும். பாலில் கலந்தும் சாப்பிடலாம்.

(
அ) தூதுவளை துவையல்

தூதுவளை இலை - 1 கைப்பிடி (காம்பு, நடுநரம்பு, முள் நீக்கி) மிளகாய் வற்றல் - 2 பூண்டு - 2 பல் நல்லெண்ணெய், புளி, உப்பு - தேவையான அளவு

செய்முறை :

தூதுவளை இலையுடன் மிளகாய் வற்றல் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு வதக்கியபின் அவற்றுடன் பூண்டு, புளி, உப்பு கலந்து அரைத்துக் கொள்ளவேண்டும். இட்லி, தோசை, சாதம் இவற்றுடன் தொட்டுச்சாப்பிட சளி, தொண்டை கரகரப்பு நீங்கி கலகலவென்றிருக்கும். 

No comments:

Post a Comment